அரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அரசாங்க ஊழியர்களுக்கான முக்கிய எச்சரிக்கையொன்றை பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ளது.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி அரச ஊடகமொன்று நேற்றைய தினம் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்தியில் மேலும்,

அரசாங்க ஊழியர்கள் பொருளையோ, பரிசு பொருட்களையோ அல்லது ஏனைய இலாப பயன்களையோ நேரடியாகவோ அல்லது மூன்றாம் நபர் மூலமோ கையேற்பது இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழும் அரச தாபனக் கோவை ஏற்பாடுகளுக்கு அமையவும் குற்றமாகுமென பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சு சுற்று நிரூபமொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய மேற்கண்டவாறு பொருட்களை அல்லது ஏனைய இலாப பயன்பளை பெற்றமை நிரூபிக்கப்பட்டால் இலஞ்ச ஊழல் சட்டத்திற்கமைய ஏழு வருட சிறை மற்றும் ஐயாயிரம் ரூபா வரையான தண்ட பணம் நீதிமன்றால் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக்காலங்களில், கம்பனிகள் அல்லது வியாபார நிறுவனங்களால் பரிசு பொதிகள், பரிசு சீட்டுகள், விமான பயண சீட்டுக்கள், விடுதிகளில் தங்கும் வசதிகள் என்பவற்றை அரச ஊழியர்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த நிலையில் அவ்வாறான விடயங்களில் இருந்து தவிர்ந்து நடக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அரச ஊழியர்களை எச்சரித்துள்ளது.

4bd4d8c70c1694545d9c8c34589501ee_XL.jpg (885×432)