ஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகளும் இலவசம்; பெற்றோர் வெளியிட்ட திருமண விளம்பரம்!

கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பெற்றோர் வெளியிட்டுள்ள வரன் தேடும் விளம்பரம், கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா என்ற அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமது இரண்டு மகள்களிற்கும் சேர்த்து ஒரே மணமகனை தேடுவதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு கலவையான பிரதிபலிப்பை சமூக வலைத்தளங்களில் தோற்றுவித்துள்ளது.


ஒரு சாரர், கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா என்ற கணக்காக நகைச்சுவையாக இந்த விவகாரத்தை கடந்து செல்கின்றனர். தற்போது வியாபார உலகில் வழங்கப்படும் கவர்ச்சிகரமான சலுகையான- ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் பாணியில் அந்த பெற்றோர் யோசித்திருக்கலாம், அவர்கள் வெற்றிகரமான வர்த்தகர்களாக இருக்கலாமென்றும் கலாய்த்து வருகிறார்கள்.

இன்னொரு சாரர், தமிழ் பண்பாட்டை கணக்கிலெடுக்காமல் எப்படி இப்படி விளம்பரப்படுத்த முடியும் என எகிறி குதித்து வருகிறார்கள்.

என்ன சொல்கிறது விளம்பரம்?

எல்லாவற்றிற்கும் முதல் அந்த விளம்பரத்தை சொல்லி விடுகிறோம். கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பெற்றோரிற்கு இரண்டு மகள்கள். மூத்தவர் கனடாவில் வசிக்கிறார். விவாகரத்தாகி விட்டது. 44 வயது. கனடாவில் வீடு, கார் எல்லாம் சொந்தமாக வைத்திருக்கிறார், அவருக்கு மணமகன் தேவையென விளம்பரப்படுத்தியுள்ளனர்.

கூடவே, கொழும்பில் வசிக்கும் கன்னித்தன்மை கழியாத 40 வயது மகளையும் அவர் திருமணம் செய்ய வேண்டுமென, அதிரடி தள்ளுபடியொன்றையும் வழங்கியுள்ளனர்.

கனடா மற்றும் இந்திய பத்திரிகைகளில் இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்டிருந்ததாக நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.