பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பான பல உண்மைகளை அம்பலப்படுத்திய மனைவி

தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவியிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சாய்ந்தமருது தாக்குதலின் போது சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் உயிர் தப்பினர். அவர்கள் கல்முனை வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வந்தனர்.

தற்போது கொழும்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதன்போது பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது சஹ்ரான் மற்றும் கூட்டாளிகள் தொடர்பில் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஐ.எஸ் பயங்கரவாதத்தின் பின்னாலுள்ள பெரும்புள்ளிகள் சிக்குவார்கள் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை தற்கொலை குண்டுதாரிகளில் இருவர் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு பெற்றுள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

ஷங்ரி-லா ஹோட்டலில் தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளும் இவ்வாறு வீடுகளை பெற்றுக்கொண்டதாக கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

பயங்கரவாதிகளான சஹ்ரான் மற்றும் இல்ஹாம் அகமட் ஆகியோர், கல்கிசை, லக்கி பிளாசா, கொள்ளுப்பிட்டி, தெமட்டகொட மகாவில கார்டன், கொச்சிக்கடை, படல்கும்புர, பிபிலை ஆகிய இடங்களில் வீடுகளை வாடகைக்கு பெற்றிருந்தனர்.

குறித்த இரண்டு குண்டுதாரிகளும், தமது பாவனைக்காக முச்சக்கர வண்டிகள் இரண்டு, மற்றும் ஐந்து கார்களையும், வாடகைக்கு அமர்த்தியிருந்துள்ளனர் என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான சஹ்ரான், அபு பக்தர், என்றும், இல்ஹாம் அகமட், அபு பாரா என்றும் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

_106594516_zahranhashim.jpg (736×414)